கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டம்கானல் நீராக உள்ளதை !! கரை சேர்க்குமா தமிழக அரசு ? ?

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திர தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற கட்டுமான நல திட்டம் 1994ல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை கட்டுமான தொழிலாளர் நல நிதியிலிருந்து தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கட்டுமான தொழிலாளியின் முக்கிய கோரிக்கையாக வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் (ESI) வருங்கால வைப்பு நிதி (EPF)மழைக்கால நிவாரண நிதி, பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத்தொகை, மற்றும் பரிசு தொகுப்பு,நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டும் என தொடர்ந்து தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நாட்டையும் நாகரீகத்தையும் உருவாக்குகின்ற கட்டிட தொழிலாளி. அனைத்து பொது மக்களுக்கும் பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த வீடு கட்டி கொடுக்கின்ற தொழிலாளி இன்றைக்கு வீதியில் உறங்குகிறான். மழைக் காலங்களில் கூட ஒதுங்குவதற்கு ஓலை குடிசை இல்லை. அப்படியே ஒதுங்க வீடு இருந்தாலும் பழுதான வீடா தான் இருக்கும். நிரந்தர தார்சு வீடு இருக்காது. உடல்நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவச் செலவுக்கு வழி இல்லை. இப்படி அன்றாடம் பிழைப்பு நடத்துகின்ற கட்டுமான தொழிலாளர்கள் வயதான காலத்தில் வாழ்க்கைச் செலவுக்கு கூட வழியில்லை. என்ற குரல் இன்று வரை தமிழகத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் அரசின் காதுகளுக்கு மட்டும் கேட்பதில்லை.
அப்படியே அரசு காது கொடுத்து கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுகின்ற வகையில் தமிழக அரசு திட்டத்தை அறிவித்தாலும் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளி பயன்பெறக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு உயர் அதிகாரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்போடு ஆராய்ச்சி பட்டம் பெற்று நடைமுறைப்படுத்த பட்டு வருகிறார்கள்.

அதில் முன்னுதாரமாக உள்ள முத்தான திட்டம் தான் கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டம். 2022,ல் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு 50,000 வீடுகள் கட்டுவதற்கு நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளிக்குரூபாய் 4 லட்சம் வழங்கப்படும். என்று அரசாணை வெளியிடப்பட்டு சுமார் மூன்றாண்டு காலம் நெருங்கிவிட்டது. தமிழக அரசு அறிவிப்பின்படி மூன்று ஆண்டு காலத்தில் 1.50, லட்சம் கட்டிட தொழிலாளி நிரந்தர வீடு கட்டி இருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை ஒரு 100, தொழிலாளி கூட பயன்பெற முடியவில்லை.

இதற்கு காரணம் கட்டுமான தொழிலாளி வீடு வசதி திட்டம் பெறுவதற்கான தகுதிகள் என சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

1,தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்று இருக்க வேண்டும்.

2,கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் குறைந்தபட்ச காலம் 3 ஆண்டு காலத்திற்கு மேல் இருத்தல் வேண்டும்.மற்றும் தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.

3,பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக் கூடாது.

4,மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேறு எந்த வீடு வசதி திட்டங்களிலும் பயன் பெற்றிருக்கக் கூடாது.

5,கட்டுமான தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ,3,00000மூன்று லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
6,பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் வீடு கட்டுவதற்கு சொந்தமாக தனது பெயரில் குறைந்த அளவு 300 சதுர அடி வீட்டுமனை இருத்தல் வேண்டும்.

7,பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ இணைந்து வீட்டுமனை பட்டா இருத்தல் வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விருப்பமுள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.அதன் அடிப்படையில் கட்டுமான தொழிலாளி நமது வாழ்நாளில் ஒரு நிரந்தர கான்கீரட் வீடு கட்டிப் பாதுகாப்போடு வாழலாம் என்ற ஆசை கனவுகளோடு விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிடைப்பது பெருத்த ஏமாற்றம் தான் காத்திருக்கிறது

ஏனென்றால் இவர்கள் குறிப்பிட்ட தகுதிகள் தான் காரணம். கட்டுமான தொழிலாளி குடும்பத்தினருக்கு காங்கிரீட் இருக்கக் கூடாது.அப்போதுதான் வீடு கட்ட நிதி வழங்க முடியும் என்றால். அனாதைகள் தான் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

அந்த அனாதைகளும் நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் நியமனதாரர் கட்டாயம் தேவை.
கட்டுமான தொழிலாளி என்பவன் நிரந்தர வேலை இல்லாத, தொழிற்சங்க சட்டப்படி அரசு அறிவித்துள்ள தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் பயன்பெற முடியாத வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவன் தான் கட்டிட தொழிலாளி.
இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ,3,00000/- மூன்று லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். என்றால் இது முரண்பாடாக இல்லையா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்த தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் அனைவரும் நல வாரிய உறுப்பினராக கருதப்படுமா?

குடும்ப உறுப்பினர் அனைவரும் நலவாரிய திட்ட உதவித்தொகை பெற முடியுமா?என்ற கேள்வி தான் எழுகிறது.

ஒரு தனி நபர் பெயரில் உள்ள அசையா சொத்தோ, பணம் எதுவாக இருந்தாலும் அவர் மட்டும்தான் ஏகபோக உரிமை கொண்டாட முடியும். அவர் விருப்பப்பட்டால் தான் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவார். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த பொதுவிதி கூடவா அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரியாது.

கட்டுமான தொழிலாளி வீடு கட்டுவதற்கு தகுதியை பார்த்தால் ஒரு கேள்வி முன் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசு ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் அவர் குடும்ப உறுப்பினர் யாருக்கும் அரசு வேலை கிடையாது என அறிவிக்க வேண்டும். அப்போது இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி,மகன் ,தகப்பன் என அனைவரும் அரசு வேலை பெற்று சுபயோகமாக வாழலாம்.இதற்கு சட்டம் செவி சாய்கிறது. என்றால் அதற்கு ஒரு உதாரணம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது.
வாழ்க்கை நடத்துவதற்கு உழைப்பவர்கள் சொல்வது எல்லாம் சட்டம் ஆகவேண்டும்.அப்போதுதான் அமைப்புசாரா தொழிலாளர் பயன்பெற முடியும் என்பதை அரசு அலுவலர்கள் சிந்திக்க வேண்டும்.
கட்டுமான நல வாரியத்தின் மூலம் வீடு கட்டும் திட்டத்திற்குதொழிலாளி டி ரமேஷ் என்பவர் சேலம் மாவட்டத்தில் 2022ல்விண்ணப்பம் செய்து அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு இரண்டு முறை நல வாரியத்தின் மூலம் பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.என்ற மகிழ்ச்சியோடு புதிய வீடு கட்டுகின்ற கனவோடு வாழ்ந்து வந்தார்.இறுதியாக வீடு கட்டும் திட்டத்தில் ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்ற தொழிலாளர் உதவி ஆணையர் அந்த விண்ணப்பத்தின் பேரில் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார்.அப்போது தொழிலாளி வீட்டில் இல்லை அங்கு இருந்த நபரை விசாரித்துள்ளார்.அவர் ரமேஷ் தந்தை நான்தான் கூறியுள்ளார்.
இந்த வீட்டில் யார் யார் வசிக்கிறீர்கள் என ACL, கேள்வி எழுப்பி உள்ளார்.எனது இரண்டு மகன்களும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வருகிறோம் எனக்கூறி உள்ளார். இந்த வீடு யார் பெயரில் உள்ளது என ACL கேள்வி எழுப்பி உள்ளார்.எனது சுய சம்பத்தில் நான் சம்பாதித்த வீடு எனக் கூறியுள்ளார். உங்களுக்கு பின்பு யாருக்கு இந்த வீடு என ACL கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ரமேஷ் தந்தை எனக்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு தான் சொந்தம் இது கூடவா தெரியாது என பதில் அளித்துள்ளார்.
இதில் என்ன தவறு என்று தெரியாது ACL அவர்கள் ரமேஷ் விண்ணப்பித்த வீடு கட்டும் திட்ட மனுவை தள்ளுபடி செய்து விட்டு அதற்கு தெரிவித்த காரணம் ரமேஷ் அவர்கள் சொந்த வீட்டில் வசித்து வருகிறார் என தள்ளுபடி செய்யப்படுகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்ட நல வாரியத்தில் தொழிலாளர் நலன் பாதுகாக்க பணியமர்த்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் தொழிலாளி உழைப்பில் பெறப்படுகின்ற லெவித்தொகையில் ஊதியம் பெற்றுக் கொண்டு உண்மையான தொழிலாளிக்கு எதிராக செயல்படுவது தொடர்கதையாக தான் தொடர்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை கட்டுமான நல வாரிய செயலாளர் அவர்களிடம் நேரில் மனு அளித்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய வீடு கட்டும் திட்டத்தில் தொழிலாளி பயன்பெற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவிவாதிக்கப்பட்டதில் நலவாரிய செயலாளர் அவர்கள் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு வீடற்ற கட்டுமான தொழிலாளர்கள் மட்டும்தான் வீடு கட்டும் திட்டம் என விளக்கம் அளித்தார்.

கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் குடிசை வீடு, சிமெண்ட் அட்டை வீடு, ஓட்டு வீடு இவற்றிலும் குடியிருக்கக் கூடாது. இவற்றில் குடியிருந்தால் வீடு இருப்பதாக தான் ஏற்றுக் கொள்வோம். என விளக்கம் அளித்தார். இந்த பதில் ஏற்புடையதாக இல்லை எனவே வாரிய செயலாளரிடம் நிபந்தனைப்படி தொழிலாளி தெருவில் வான்வெளியில் வசித்தால் தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்ற கேள்விகளுக்கு வாரிய செயலாளர் பதில் நான் ஒன்றும் செய்ய முடியாது அரசாணையில் உள்ளபடி வீடு கட்டும் திட்டம் செயல்படும் என பதில் அளித்து முடித்து விட்டார்.

தமிழகத்தில் 50 ஆண்டுக்கு முன்னரே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற பெயரில் அப்போதைய முதல்வர் திரு மு கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் குடிசை வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக குடிசையை மாற்றி நிரந்தர கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா?

தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 2021ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்து ஏழைகள் பயன்பெற திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 “கலைஞரின் கனவு இல்லம் “திட்டத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. அனைத்து குடிசைகளையும் மாற்றி அனைவருக்குமே பாதுகாப்பான காங்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குடிசையில் வசிப்போர், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், வீட்டுமனை பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் ஏழை எளிய மக்களை கண்டறிந்து 360 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் வீடு கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைக் கூடவா அறிந்திருக்க மாட்டார்களா அரசு உயர் அதிகாரிகள்?

தமிழக அரசு சிறப்பான திட்டத்தை அறிவித்தாலும் எந்த ஒரு தொழிலாளியும் பயன் பெற்று விடக்கூடாது என்ற சிந்தனையோடு விதிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
கட்டுமான நல வாரியத்தின் மூலம் தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்றால் தகுதிகள் என்ற அடிப்படையில் தேவையில்லாத நிபந்தனைகள் உள்ள அரசாணை எண் 07.ல் நிரந்தர வீடற்ற என திருத்தம் செய்து தொழிலாளி உரிமைகளை முழுமையாக பெற கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளியின் பெயரில் ஏற்கனவே வீடு இல்லை என்றால் அவருக்கு இந்தத் திட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினரை காரணம் காட்டி வீடு கட்டும் திட்டத்தை முடக்க நினைப்பது. நல வாரிய நோக்கத்துக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.

தமிழகத்தில் நல வாரியங்களில் தொழிலாளி ஒரு உறுப்பினர் பதிவு செய்தால் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் நலவாரிய உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுகிறதா?என்பதை அரசாணை வெளியிட்ட அறிவார்ந்த அரசு உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இதில் தெளிவு இல்லாதவரை கட்டுமான தொழிலாளியின் வீடு கட்டும் திட்டம் வெறும் கணவு திட்டமாக தான் கானல் நீராக தான் காட்சியளிக்கும், ஒரு போதும் கரை சேராது.

கட்டிட தொழிலாளியின் கனவு திட்டமான வீடு கட்டத் திட்டத்தை கரை சேர்க்குமா தமிழக அரசு காத்திருக்கும் கட்டிடத் தொழிலாளர்கள்.

ஆ.கதிர்வேல். தலைவர்.
தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு