டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி பேரவை உறுப்பினரும், தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் டி என் பி எஸ் சி தேர்வுகள் குறித்து போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தயாரித்த டி என் பி எஸ் சி குரூப் 4 வழிகாட்டி நூலினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை சந்தித்து வழங்கினார். பின்னர் அரசு பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்ததாவது :- அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் தற்போது இருந்தே தயாராக வேண்டும். போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு 2025- ஆம் ஆண்டு பொற்காலமாக இருக்கப் போகிறது. 2025- ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டி தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளன. பெரும்பான்மையான போட்டி தேர்வுகள் எதிர்கொள்ளும் குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 21- ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. எனவே போட்டித் தேர்வர்கள் தற்போது இருந்தே தயாராக வேண்டும். இதுகுறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து நான் தயாரித்த குரூப் 4 வழிகாட்டி நூலினை வழங்கினேன். மேலும் கல்வித்துறை சார்ந்த உயரதிகாரிகளிடமும், பேராசிரியர்களிடமும் நூல்கள் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.