தேசிய மற்றும் மாநில அளவில் நல வாரியம் அமைக்க வேண்டும்! பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க கருத்தரங்கில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ் மகாலில் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை உணர்த்திய உண்மைகளும், தேவைப்படும் மாற்றங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மாணவர் சங்க நிர்வாகி மைக்டெலிகேட் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்விற்கு தலைமை வகித்து கொல்கத்தாவில் தொடரும் போராட்டம் என்ற தலைப்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க நிர்வாகி கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

பெண்கள் மீதான வன்முறை தீர்வை நோக்கி என்ற தலைப்பில் இயக்குனர் கீதா இளங்கோவன், எழுத்தாளர் நிவேதிதா ஆகியோர் பேசினார்கள். நிறைவாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர் இரவீந்திரநாத் மருத்துவர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் உரையாற்றும்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும்,
வேதனையையும் அளிக்கிறது.
முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறை இல்லாததும், கூட்ட அரங்கில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை இருந்ததும், பாதுகாப்பு வழங்கல் இல்லாததுமே இந்த கொடுமையான நிகழ்விற்குக் காரணம்.
இதற்கு மேற்கு வங்க அரசும் ,கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்.
இம்மாணவியை படுகொலை செய்த குற்றவாளிக்கு சட்ட ரீதியான கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்திட வேண்டும்.
இம்மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடும் மேற்கு வங்க மருத்துவ மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

கொல்கத்தாவில் நடந்த இந்தக் கொடுமையான நிகழ்வு மருத்துவ மாணாக்கர்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.இது கவலை அளிக்கிறது.
மருத்துவர்களின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதிப் படுத்திட வேண்டும்.
மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
அதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
களில் மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்தியா முழுவதும், மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
கொல்கத்தா கோர நிகழ்வு போன்று தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் வளாகங்களுக்குள் , அனுமதியின்றி யாரும், எப்பொழுதும், எங்கும் செல்லலாம் என்ற தற்போதைய நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள
பல மருத்துவக் கல்லூரிகளில் , பாலியல் ரீதியான வன்முறை புகார்கள் வரும் பொழுதெல்லாம், கல்லூரி நிர்வாகங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. புகார்களை ஏற்பதில்லை.புகார் அளிக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். புகார் அளிக்கும் பெண்ணுடைய எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற வகையில் பல காரணங்களைக் கூறி, சமரசம் செய்வதும், கட்டப் பஞ்சாயத்து செய்வதும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி முறையாக அமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் விசாகா கமிட்டி உறுப்பினர்களுடைய பெயர்கள் அடங்கிய ,பெரிய பெயர் பலகைகளை வைக்க வேண்டும். அதில் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களும் இடம் பெற வேண்டும்.
தற்பொழுது அவ்வாறு பெயர் பலகைகள் இல்லை.புகார்கள் வரும் பொழுது, விசாகா கமிட்டி தலைவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்களைக் கூட பெற முடியவில்லை.
கடும் முயற்சி எடுத்தே கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது . இது மிகுந்த வருத்தத்தை தருகிறது. “தமிழக அரசு
மருத்துவக் கல்லூரிகள் பாதுகாப்புக் குழு ” என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பிற கல்லூரிகளைப் போல காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டும் செயல்படுவது அல்ல. 24 மணி நேரமும் , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆகவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற மருத்துவ மாணவிகள், மாணவர்கள், மருத்துவர்கள்,பெண் ஊழியர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவ கல்லூரிகளிலும் விடுதிகளிலும் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து செயல்பட வேண்டி உள்ளது.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகவே மருத்துவ மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிப் படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்குகின்ற விடுதிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயோ அல்லது அதற்கு மிக அருகிலேயோ அமைக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரி விடுதிகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு செல்லும் வழி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதுமான அளவு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட வேண்டும்.போதிய பாதுகாவலர்களை நியமிக்க
வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வார்டுகள் , தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற இடங்களில் மருத்துவர்கள் , நோயாளிகளின் உறவினர்களால் எளிதில் தாக்கப்படும் ஆபத்து நிலவுகிறது. அத்தகைய தாக்குதல்கள் நிகலாமல் தடுப்பதற்கு, பாதுகாப்புக் கதவுகள், கேமராக்கள் அமைப்பது,போதிய பாதுகாவர்களை நியமிப்பது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
மருத்துவக் கல்வி பயிலும் இளநிலை முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ மாணவிகள் மட்டுமின்றி அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பான பணி சூழல் அமைத்துக் கொடுத்திட வேண்டும்
மருத்துவமனைகளின் பணியிடங்களில், பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். மருத்துவ மாணாக்கர்கள் , மருத்துவர்கள் எதிர் கொள்ளும் பல வகையான வன்முறைகள், அச்சுறுத்தல்கள், ராகிங் , கடும் பணிச் சுமை பிரச்சனைகள் அவர்களுக்கு உடல் ரீதியான , உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது .இதனால் ,சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப் படுகிறார்கள்.
எனவே இவற்றை தடுத்திட
“மருத்துவ மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான நல வாரியம்” என்ற‌ அமைப்பை மாநில அளவில் உடனடியாக உருவாக்க வேண்டும் ,
பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக பணி வழங்குவதை கைவிட வேண்டும்,
அனைத்து மருத்துவ மாணவியருக்கும், பெண் மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும், பெண் மருத்துவப் பணியாளர்களுக்கும்,
பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்,
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுத்திட வேண்டும். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென ஒன்றிய, மாநில அரசுகளை இக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
மருத்துவ மாணவர்களின் புகார்கள் தொடர்பாக தீர்வு காணவும்,அவர்களின் நலன் காக்கவும் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நலவாரியம் அமைத்திடவும்,
ஏழை மருத்துவ மாணாக்கர்களின் கல்வி,விடுதி,உணவு , கலந்தாய்வு ,விண்ணப்ப மற்றும் அனைத்துக் கட்டணங்களையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏற்க வேண்டும்,
பணியின் போது இறக்கும் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணாக்கர்களின் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம், மாணவர்களுக்கு விடைத்தாள் நகலை கோரியவுடன் உடனடியாக வழங்க வேண்டும்.மறு மதிப்பீடு மறுகூட்டலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.இந்நடவடிக்கைகள் விரைவாக காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும், பயிற்சி மருத்துவர்களுக்கும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்குமான பயிற்சி கால உதவி ஊதியத்தை ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்க வேண்டும். காலதாமதமின்றி மாதத்தின் இறுதி நாள் அன்றே, இவ்வூதியத்தை வழங்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இவ்வூதியம்வழங்கப்பட வேண்டும், இளநிலை,முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் கல்லூரி மற்றும் விடுதிகளில் இலவச வைஃபை வசதி செய்து கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்கள் தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டு முதுநிலை மருத்துவ இடங்களில் சேர்வது கடினமாகியுள்ளது. அவர்களால் அதிக அளவில் சேர இயலவில்லை. எனவே, அரசு மருத்துவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், அரசு சாரா மருத்துவர்களும் கனிசமான அளவில் மருத்துவ இடங்களை பெறும் வகையில் நடவடிக்கைகளை ஒன்றிய , மாநில அரசுகள் எடுத்திட வேண்டுமென மருத்துவர் இரவீந்திரநாத் உரையாற்றினார். முடிவில் தஞ்சாவூர் மருத்துவ மாணவர் சங்க நிர்வாகி பூஜா நன்றி கூறினார்.