
கோவை கணுவாய் அருகே சோமையம்பாளையத்தில் கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் என் ராஜேந்திரன் ஆகியோரின் நினைவாக, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிகளுக்கு இடையே நடத்திய மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளில் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் என் ராஜேந்திரன் ஆகியோரின் நினைவாக, 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகளை, கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து 3 நாட்கள் நடத்தியது.
கோவை கணுவாய் அருகே உள்ள ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 சிறுவர் மற்றும் சிறுமியர் இந்த நாக் அவுட் மற்றும் லீக் போட்டிகளில் பங்கேற்றனர். இறுதி நாள் போட்டிகள் லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பள்ளி அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தின.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும், ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியுமான எஸ்.ஆர். ஆறுச்சாமி வரவேற்புரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார்.
மேலும் முதன்மை விருந்தினராக ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். வேலுமணி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில்
கௌரவ விருந்தினர்களாக, இந்திய வருவாய் சேவை அதிகாரியும் சுங்கம் மற்றும் மத்திய உற்பத்தி வரி துறையின் உதவி ஆணையர் ஓய்வுபெற்ற ஆர். நாராயணசாமி, சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.பி. ரங்கராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை மேலாளர் ஆர். ராஜேஷ், சென்னை எஸ்.டி.ஏ.டி. நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ஆர். ராஜா மகேந்திரன், இந்திய கடற்படை பயிற்சியாளர் ஜெயபிரகாஷ், சோமசுந்தரம், கிருபாகரன், வருமான வரித்துறை நிர்வாக அலுவலர் ஏ.ஓ., வி.சி.ஆர். பிரகதேஷ், டி.எஸ்.என். மணிகண்டன், வாடவள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த மொஹம்மது மிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
