
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முதற்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியானது ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை பயிற்சி நிலையத்தில் இளம் பெண்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மேற்பார்வையாளர் நந்தகோபால் மற்றும் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் 27 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி நடத்தினர். இதில் சிறப்பு மற்றும் வாழ்வாதார திட்டம் மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி குறித்து உணவு பாதுகாப்பு துறை மேற்பார்வையாளர் நந்தகோபால் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அடிப்படை பயிற்சி பற்றி நடத்தினார். இந்த பயிற்சியில் உணவை தரமாகவும் சுவையாகவும் உண்ணக்கூடியதாகவும் வழங்கிடவும் மற்றும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல் உணவுப்பொருட்கள் தயாரிக்க வேண்டும் எனவும் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் உள்ள சைவ அசைவ குறியீடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் ஒகேனக்கல் மீன்வள மேற்பார்வையாளர் மகேந்திரன் உள்ளிட்ட மீன்வளத் துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
