
கோவையில் விலை உயர்ந்த காருக்கு போலி ஹெட்லைட் பல்புகளை விற்று ஏமாற்றிய கோயம்புத்தூர் உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு ரூ.40,850 அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாமக்கல் மாவட்டம் ராச கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், தனது ‘டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ்’ காருக்காக, கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சீனிவாசன் பொன்னுசாமி, பிரமிளா ஆகியோருக்கு சொந்தமான தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு பிலிப்ஸ் பல்புகளை வாங்கியுள்ளார். சுமார் 3,000 ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த பல்புகள், அடுத்த சில மாதங்களிலேயே பழுதாகி ‘பல்லிளித்தன’.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிலிப்ஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். புகாரை விசாரித்த நிறுவனம், அவருக்கு இரண்டு பல்புகளை இலவசமாக வழங்கியது. அப்போதுதான், தான் முதலில் வாங்கிய பல்புகள் அசல் அல்ல, அவை போலியானவை என்பது பிரபுவுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து கடையிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லைமாறாக, “பரிகாரம் கிடைத்துவிட்டது, இதற்கு மேல் நீதிமன்றம் போனால் சரியிருக்காது” என மிரட்டும் தொணியில் பதில் வந்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த பிரபு, சட்டத்தின் கதவைத் தட்ட முடிவு செய்தார்.
வழக்கறிஞர்கள் பலரும் “இந்த வழக்கு நிற்காது” எனக் கைவிரித்த நிலையிலும், பிரபு மனம் தளரவில்லை. இணையதளம் மற்றும் ‘யூடியூப்’ உதவியுடன் நுகர்வோர் சட்டங்களை முறையாகக் கற்றுக்கொண்டார். போலி பல்புகளின் அட்டைப்பெட்டி, அதில் இருந்த பார்கோடு, வரி ரசீதில் இருந்த குளறுபடிகள் என அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, வழக்கறிஞர் உதவியின்றி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தானே வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம், வாடிக்கையாளரைத் திட்டமிட்டு ஏமாற்றியது உறுதியானதால், தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு பின்வரும் அபராதத்தை விதித்தது. பல்புகளின் விலை ரூ. 8,850, இழப்பீட்டுத் தொகை: ரூ. 25,000,மன உளைச்சலுக்கான இழப்பீடு: ரூ. 5,000 மற்றும் வழக்குச் செலவு: ரூ. 2,000 மொத்தம் 40,850 ரூபாய் தொகையை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே இந்த நிறுவன உரிமையாளர் சீனிவாசன் மீது சொந்த சகோதரரே போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“பெரிய கடைகளுக்குச் சென்றால் அசல் பொருட்கள் கிடைக்கும் என நம்பும் நுகர்வோரை ஏமாற்றுவது தவறு” என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
