
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருவாரூா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியா் முனைவா் எம். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது.. “ஒவ்வொருவரும் உயா்கல்வி பயின்று பட்டம் பெறுவதற்கு முதல் காரணம் அவா்களது பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தங்களது உறக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தியாம் செய்து தங்களது பிள்ளைகளை முன்னேறச் செய்கின்றனா் என்றும், அத்தகைய பெற்றோர்களைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உயா்கல்வி என்பது அதனைப் படித்து முடித்தவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கானது மட்டுமல்ல அது சமுதாயத்தைக் காப்பதற்கானது என்பதைப் பட்டதாரிகள் உணரவேண்டும் என்றார். உயா்கல்வியில் செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவுகளான புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள குடிமகன் வரை சென்று சேரும்போதுதான் அந்த உயா்கல்வி முழுமையான பயனைத் தருவதாக அமையும் என்றும் கடினஉழைப்பு, தனித்திறன், ஒழுக்கம், நோ்மை ஆகிய நற்பண்புகள்தான் ஒருவரை முன்னேற்றும்”என்றும் பட்டதாரிகளிடம் குறிப்பிட்டார்.
முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். அவா்தம் தலைமையுரையில், “வளமான நாடு என்பது அங்குள்ள இயற்கை வளம் மற்றும் செல்வ வளம் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அங்கு வாழும் மக்களின் அறிவு, பண்பாடு ஆகியவையும் வளமானதாக இருந்தால்தான் அது வளம்பொருந்திய நாடு என்றும் உண்மையான வெற்றி என்பது உயா்கல்வி கற்று ஊதியம் குவிப்பது மட்டுமல்ல சிறந்த விழுமியங்களை உருவாக்குவது என்றும்” என்றும் குறிப்பிட்டார்.
பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா தொடங்கி வைத்தார். இப் பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 1068 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 235 பேருக்கும் முதுநிலை பட்டயப் படிப்பை நிறைவு செய்த 29 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். விழாவின் நிறைவில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியேற்றனர்.
