பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி வெற்றியாளர்களுக்கு கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் பரிசுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கோவை மாவட்ட டென்னிஸ் சங்க முன்னாள் தலைவர் கே.ஜி. ரமேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
1977-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டேவிஸ் கோப்பை போட்டியைத் தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி, இந்த ஆண்டுடன் தொடர்ந்து 48-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. நாட்டிலேயே நீண்டகாலமாக நடைபெறும் மிகப்பெரிய மாவட்ட அளவிலான டென்னிஸ் லீக் போட்டிகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. 2026-ஆம் ஆண்டுக்கான போட்டியில் 11 பிரிவுகளில் 116 அணிகள் பங்கேற்றதுடன், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 1,117 வீரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி, இப்பகுதியின் முக்கியமான டென்னிஸ் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விழாவில் பேசிய சங்கச் செயலர் எம். சதீஷ் குமார் நாயர், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் சீனிவாசன், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் டென்னிஸ் விளையாட்டை வளர்ப்பதில் சங்கம் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அதன் முயற்சிகளால் கே.ஜி. ரமேஷ், நிருபமா வைத்தியநாதன், ஸ்ரீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி-முருகேசன் மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி உள்ளிட்ட பல்வேறு சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.