
நாகரசம்பட்டி காவல் சரகம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் (28), சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி – செந்தாமரை தம்பதியர். இவர்களது மகன் அருண்குமார் (28, PC 52336). இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் (1st Platoon) இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்தார். 2018-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில், கடந்த ராணிப்பேட்டையில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண விழாவில் அருண்குமார் கலந்துகொண்டார். திருமணம் முடிந்து நண்பர்களுடன் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காவலர் அருண்குமார், உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சென்னை போரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10.30 மணியளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அருண்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று மாலை, நாகரசம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட மருதேரி கிராமத்தில் உள்ள மயானத்தில், காவலர் அருண்குமாரின் உடலுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள், சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், காவல் துறை விதிமுறைகளின்படி 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளம் காவலரின் இந்த மறைவு அவரது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
