
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் செயலர் பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் பிரேம்சந்த் ஆகியோரின் ஆலோசனையின் படி பள்ளி மாணவப் பிரதிநிதி, துணை பிரதிநிதி மற்றும் பள்ளியில் செயல்படும் நான்கு குழுக்கள் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு நடைபெற்று அவர்களுக்கான பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜபாரதி மற்றும் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து பள்ளியின் பிரதிநிதி, துணை பிரதிநிதி, 4 குழுக்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பொறுப்பை ஏற்கும்முன் மாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் புல்ஸ் அணி, ஈகிள்ஸ் அணி, பேன்த்தர்ஸ் அணி, ரெய்னோஸ் அணி உள்ளிட்ட அணியினர் கைகளில் தங்களது கொடியினை ஏந்தி பேரணியாக வந்து பள்ளி மைதானத்தில் நிறுவினர். மேலும் பள்ளி மாணவர் தலைவர், துணை தலைவர், புல்ஸ் அணி தலைவர், துணைத் தலைவர், ஈகிள்ஸ் அணி தலைவர், துணை தலைவர், பேன்த்தர்ஸ் அணி தலைவர், துணைத் தலைவர், ரெய்னோஸ் அணி தலைவர், துணை தலைவர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பேட்ஜ் அணிவித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதி, துணை பிரதிநிதி மற்றும் குழு பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை சரிவர செய்வோம் என அனைவரின் முன்னிலையில் கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜபாரதி குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகளையும், குழந்தைகள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என அழகாக மேற்கோளுடன் அறிவுறுத்தினார். மேலும் போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை, அலைபேசி பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
பள்ளியின் முதல்வர் அக்ரியா ஜான்சி மற்றும் அன்பு வடிவு ஆகியோரின் மேற்பார்வையில் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தேசிய மாணவர் படை மாணவர்களின் பேண்ட் வாத்திய நாட்டுப் பணிவுடன் விழா நிறைவடைந்தது.
