திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை ரயில்வே பாலம் தரைத்தளம் அமைக்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. உறுதி; பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்ததுடன், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆர். ரவிக்குமார் ரயில்வே பாலம் அமைந்துள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து, பிரச்சினைக்கு உரிய தீர்வு காண தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

பின்பு அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, ரயில்வே பாலத்தின் கீழ் விரைவில் தரைத்தளம் (Underpass) அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், பல மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறையாவது எங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தரைப்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.