
தமிழக முதல்வர் விஜய் கோவை காந்திபுரம் பகுதியில் 301 கோடியே, 71 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் எனும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பெரியார் அறிவுலகம் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவை வந்தடைந்த தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து தரை மற்றும் ஏழு தலங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி கட்டட பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையமான பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தரைதளத்தில் 356 இருக்கைகளுடன் கூடிய கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 90 இருக்கைகளுடன் கூடிய கோளரங்கம், மற்றும் விண்வெளி பயண மின்தூக்கி, உள்ளிட்ட அனைத்தையும் கண்டு ரசித்து பள்ளி மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடினார். மேலும் பெரியார் அறிவுலகத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து அரங்குகள் குறித்து ஆய்வு செய்தார். முதல் தளத்தில் வரவேற்புரை மற்றும் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம், மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டி தேர்வுகளுக்கான நூலகம், மற்றும் கிளை நிர்வாக அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு, மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்களில் ஆங்கில புத்தகப் பிரிவு, மற்றும் தொழில் முனைவோர் மையம், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், திறந்தவெளி மற்றும் மின் நூலகம், மேல் தளத்தில் 100 இருக்கைகளுடன் கூடிய மின்னோக்கு மையம், அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து தமிழக முதல்வர் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, 408 கோடியே 25 லட்ச ரூபாய், செலவிலான 89 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 32 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, 144 புதிய கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 9343 பயனாளிகளுக்கு, 34 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
