தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.
இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு செய்ய இறைவனையே அழைப்பதாகவே உள்ளது. எனினும், தனிமனிதன் மட்டும் இவ்வேக்கத்தை நிறைவு செய்தால் போதாது, மாறாக, மனிதர்கள் ஒரு சமூகமாக இணைந்து இந்த ஏக்கத்தை நிறைவுசெய்வதில், நன்மையும், உண்மையும் மலர்ந்துள்ள வாழ்விற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு விழாவும் எடுத்துரைக்கின்றது. இவ்வழியில், தீபாவளி என்னும் தீப ஒளி விழாவினை, இந்து மறையைச் சார்ந்த நம் சகோதரர்கள் கொண்டாடுவது மகிழ்ந்து போற்றக்கூடிய ஒரு விழா! தீமையை அழித்து
நன்மையை நிலை நிறுத்தும் ஒரு வெற்றியின் விழா! இந்த தீமையை அழிப்பதில், “நாங்கள் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம்” என்று நம் இந்து மறையைச் சார்ந்த மக்கள் எடுத்துரைத்து அதை விழாவாகக் கொண்டாடுவது, நம் மானுடச் சமூகத்தை கட்டியெழுப்புவதில் மேலும் பலம் சேர்க்கிறது. எனினும், எந்த தீமையை அழிக்க, எந்தப் பொய்மையை அகற்ற நாம் ஒன்று கூடுகிறோம் நாம் விழாவாகக் கொண்டாடுகிறோம் என்பதில் தெளிவு தேவை. தீபாவளி என்பது ஒளியின் விழா. ஒளி என்பது பொய்மையை நீக்குகிறது. இருளினைப்
போக்குகிறது. இறவாமையை அளிக்கிறது. ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும். உண்மையையும் விளைவிக்கிறது என்கிறது விவிலியம் (எபே.5:8) எனவே, “உண்மைக்காய் வாழ்ந்து, நன்மையை மலரச் செய்து இச்சமூகத்தை வளமாக்குவோம்; மகிழ்ச்சியையும், அமைதியையும் இச்சமூகத்தில் பேணிக்காப்போம்.” என்ற மனநிலையை ஆழப்படுத்தும் நிகழ்வாக இத்தீப ஒளித்திருநாள் அமையட்டும். ஏழைகளும், எளியோரும், தம்முடைய எளிய வாழ்விலும் மகிழ்ச்சியுண்டு என்ற நம்பிக்கையை வளர்ப்பதாக இத்தீபாவளித்திருநாள் மலரட்டும். அன்பை வளர்க்க வேண்டியவை மதங்கள் என்ற உண்மையை அறிந்து, மதவெறி, மதத்தின் பெயரால் ஏற்படும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறை களைந்து, நல்லிணக்கமும், அமைதியும் நிலைத்திடச் செய்வதாக இத்தீபாவளித்
திருநாள் அமையட்டும். இந்து மறைசார்ந்த சகோதரர்களுக்கு இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை
மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமி
தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….
