கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் இருந்த கிராம மக்கள் : நேரில் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை ஆற்றில், சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரை பாலத்தின் மீது வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வந்தனர். இன்று காலை குறைந்த அளவில் சென்ற நீர்வரத்து தற்போது இன்னும் வேகம் எடுத்து அதிகமாக தண்ணீர் இந்த ஆற்றில் ஓடுவதை தற்போது திறையில் காண முடிகிறது.

இங்குள்ள கிராம மக்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும் தங்களின் அன்றாட தேவைகளுக்காக இந்த தரை பாலத்தின் மீது சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பெஞ்சல் புயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி செலம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் சென்று வந்த விவசாயிகள், மருத்துவ அவசர உதவிக்காக செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆண்டுக்கு குறைந்தது ஐந்து முறையாவது இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் அப்பொழுது இப்பகுதியில் உள்ள மக்கள் ஆற்றைக் கடந்து செல்வதற்கு இது போன்ற சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் எனவே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்றும் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர் கிராம மக்கள் .

இத்தகவலை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் தவிப்புக்குள்ளான கிராம மக்களுக்கு உதவி செய்து அக்கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனை அடுத்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சரிடம், உயர் மட்டம் பாலம் அமைப்பதற்கான கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் விளக்கினர்.
இதனை அறிந்த அமைச்சர், தமிழக முதல்வரிடம் கிராம மக்களின் கோரிக்கையை விளக்கி பின்பு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும் புயல் காரணமாகவும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகவும் எனவே கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.