பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைத்தலைவர்,தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,கே.நவாஸ்கனி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும் வெளியூர்களிலும் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் பொங்கல் திருநாளை சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே தாம்பரத்திலிருந்து மண்டபம் வரை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது போல சென்னையில் இருந்து மண்டபம் வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை- சென்னை சென்ட்ரல் இடையே பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு,சேலம் வழியாக ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பயன்படும் வகையில் இராமநாதபுரம் அல்லது மண்டபம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களுருவிலிருந்து கோவை,நாமக்கல்,கரூர்,திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம் கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம் பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம்,ஹைதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிடவும்,சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் விரைவு வண்டிகளில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
