வலங்கைமான் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் கண்ணாடிக்கார தெரு பகுதியில் இருந்து வடியும் மழை நீர் சத்தக்கார தெருவில் வந்து தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இதனை அடுத்து பேரூராட்சி மன்ற 5-வது வார்டு உறுப்பினர் க.செல்வம் பெரும் முயற்சியால் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் வெளியேறும் விதமாக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், அதற்கு கண்ணாடிக்கார தெரு,சத்தக்கார தெரு இணைப்பு பாலம் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் செல்லும் விதமாக இரு புறங்களிலும் சிறிய அளவிலான சுவர்கள் அமைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் சிலாப்புகள் பொருத்தி மக்கள் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மழை நீர் வடிகால் கைலாசநாதர் கோவில் சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகாலுடன் இணைக்கப்படும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.