
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிங்காரவீதி மற்றும் தேர்வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழி பிரதான சாலையாக இல்லாமல், ‘சப்வேயாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வார சந்தை நாளான திங்கட்கிழமைகளில் சிங்காரவீதி, தேர்வீதியில் கூட்டம் அதிகளவில் இருக்கும். மேலும், விடுமுறை நாள் தவிர்த்து, ‘பீக் ஹவர்ஸான’ காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வேன், பஸ்களும், இரு மற்றும் சக்கர நான்கு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இவ்வழியே சமீப காலமாக கனரக வாகனங்களின் சென்று வருவது அதிகரித்துள்ளது. வீதிகளை ஒட்டி குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், சிறுவர்கள், பெரியவர்களும் மற்றும் பெண்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே வந்து செல்கின்றனர்.
இவ்வழியே சென்று வரும் கனரக வாகனங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கு பயப்படுகின்றனர். குறிப்பாக, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் ரோட்டை நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.
மேலும், அதிக சத்தத்தை எழுப்பியும், வேகமாகவும் வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்தியூர் கார்னர், பொரிக்கடை கார்னரில் இருந்து, இவ்வீதிக்குள் நுழையும் கனரக வாகனங்களை பிரதான சாலையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது;
இட நெருக்கடி சாலையாக உள்ள தேர்வீதி மற்றும் சிங்காரவீதியில் கடந்த இரண்டு மாதங்களாக கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன. குறிப்பாக, பாரம் ஏற்றிய கனரக வாகனங்களே அதிக அளவில் செல்கின்றன.
அந்தியூர் அரசு மருத்துவமனையிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லவும், சத்தி ரோட்டில் பொரிக்கடை கார்னர் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல, பிரதான சாலை இருக்கும்போது ‘குறுக்கு’ வீதியில் வாகனங்கள் வந்து செல்வதால் நெரிசலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
காலை, மாலை நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களால் ஆங்காங்கே போக்குவரத்து தடைபட்டு ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுகிறது. எனவே, அந்தியூர் டிராபிக் போலீசார் இவ்வழியில் செல்லும் கனரக வாகனங்களை பிரதான சாலையான பர்கூர்ரோடு, சத்தி ரோட்டில் திருப்பிவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
