மக்கள் விராத, தொழிலாளர் விரோத ,ஒன்றிய மோடி அரசை கண்டித்து நவம்பர் 26 பேரணி- ஆர்ப்பாட்டம்! தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பேரணியை தஞ்சாவூரில் சிறப்பாக நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னனி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சிஐடியு அலுவலகத்தில் இன்று காலை 11:30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ் கே எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை அரசு ஏற்ற நடத்த வேண்டும், தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், பொது துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், புதிய வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், நலவாரியங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வீடற்ற அனைவருக்கும் இலவச வீடு வழங்குவது உறுதி செய்ய வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கை 2024 கைவிட வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது மற்றும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் நவம்பர் 26 ஆம் தேதி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு பேரணி துவங்கி, காந்திஜி ரோடு வழியாக தலைமை அஞ்சலகம் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏ ஐ டி யு சி நிர்வாகிகள் வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன், சி ஐ டி யு நிர்வாகிகள் ஆர்.மனோகரன், கே. அன்பு,பி.என். பேர்நீதிஆழ்வார், ஈடிஎஸ். மூர்த்தி, ஏ ஐ சி சி டி யூ நிர்வாகிகள் கே.ராஜன், எஸ் .மாரியப்பன், பொதுத்துறை ஓய்வூதியர் சங்க என்.குருசாமி, அனைத்து அரசு ஓய்வூதியர் சங்க ஆர்.கலியமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க டி.கோவிந்தராஜு, ரிவா சங்க ஞானசேகரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.