வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலம், மாத்தூர் இடையே வெட்டாற்றில் ரூபாய் 9 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றை இணைக்கும் விதமாக வெட்டாற்றில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நபார்டு நிதியில்ரூபாய் 9 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டது. இதை அடுத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது பாலம் கட்டும் பணி முடிவு நிலையை எட்டியது. புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் மூலம் நரசிங்கமங்கலம் பகுதியில் இருந்து வலங்கைமான் மற்றும் குடவாசல் செல்வதற்கு ஏதுவாகவும், அதேபோன்று மாத்தூர் பகுதியில் இருந்து வலங்கைமான் செல்வதற்கு ஏதுவாகவும் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.