
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போட்டுவிட்டு செல்வதால் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் குப்பைகள் சாலை ஓரங்களில் காணப்படுகிறது. இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை நாட்களிலும் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையிலான வனக் குழுவினர் சுற்றுலாப் பணிகள் அதிகம் வரக்கூடிய நாட்களிலும் வன சாலை ஓரங்களில் சுற்றுலாப் பயணிகளால் வீசி செல்லப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல் சின்ன ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் உள்ள குப்பைகளை இருவருக்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் நிரப்பி அப்புறப்படுத்தினர்.
