
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினம் தோறும் வந்து செல்கின்றனர். அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஈமச்சடங்குகள் செய்வதற்காக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கும் இறந்தவர்களுக்கும் ஈம காரியங்கள் திதி கொடுக்கும் சடங்குகள் செய்வதற்காக முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றிற்கு வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கும் இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பது ஈமச்சடங்குகள் செய்து வருகின்றனர். இங்கு வரும் பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கும் இறந்தவர்களுக்கும் திதி மற்றும் தர்ப்பணங்கள் கொடுக்கச் செல்லும் பொழுது காவிரி ஆற்றில்மூழ்கி அவர்களின் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆறு பகுதியில் அதிக அளவில் துணி கழிவுகளால் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆறு பகுதிகளில் துணிக்கழிவுகள் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் அறிவுறுத்தியலின்படியும் கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மேற்பார்வையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கூத்தப்பாடி ஊராட்சி பணியாளர்கள் ஒன்றிணைந்து முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் உள்ள துணிக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
