
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், ஐ.பி.எஸ். கலந்து கொண்டு, சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கத்தையும், இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், புற்றுநோயின் கடுமையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது, சிகிச்சையை மேம்படுத்துவைத்து மற்றும் சமூகத் தடைகளை நீக்குவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு எதிரான கருப்பொருளாக, தனித்துவத்தால் ஒன்றிணைவோம் என்ற கருத்தை கொண்டு, மனிதநேய அடிப்படையிலான புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன்,ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
தொடர்ந்து 20-ஆவது ஆண்டாக புற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் முயற்சியாக இந்த விழிப்புணர்வு அமைகின்றது என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் , ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பார்கவி, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.எஸ்.அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
