
புதுடெல்லி ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டிகள்,சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள வருண் தற்காப்பு கலைக்கூடம் பள்ளியில் சிலம்பம் பயிற்சி பெற்ற மூன்று பேர் பங்கேற்றனர்.அதில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் தருண் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் சிலம்பம் போட்டியில் ஆறு பிரிவுகளில் பங்கேற்று ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் சிவக்குமார் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் சிலம்பம் போட்டியின் இரண்டு பிரிவில் பங்கேற்று இரண்டு தங்கப்பதக்கமும் அதேபோல் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டியில் கோவை கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் வருண் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு பிரிவுகளில் முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கமும் சிலம்பம் போட்டியில் ஆறு பிரிவுகளில் 5 போட்டிகளில் முதலிடம் பிடித்து ஐந்து தங்கப் பதக்கமும் ஒரு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து ரயில் மூலம் கோவை வந்த மூவருக்கும் கோவை ரயில் நிலைய வளாகத்தில் அவர்களது பெற்றோர் மற்றும் ரயில் நிலைய ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பொன்னாடை அணிவித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.டெல்லியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில் சிலம்பம் பிரிவில் ராஜஸ்தான் அணி தங்களுக்கு கடும் போட்டியாக இருந்ததாகவும் கடும் போட்டியையும் சமாளித்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்…..
