
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வடக்கு மண்டல திமுக சார்பில் தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக BLA–2, BDA, BLC உள்ளிட்ட வாக்குச்சாவடி முகவர் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
மேலும் இந்த மாநாடு வரும் 14ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, மண்டலவாடி கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் மாநாடு திடலில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட வடக்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டியினர் என சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் க.தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
