
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் கல் குவாரியை உடனடியாக ஆய்வு செய்து நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், வெடி வெடிப்பதால் வீடுகள் சேதமடைந்து இடியும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும், தூசி மாசுகளால் உடல் நலம் பாதிப்பதாகவும், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும்,மேலும் அப்பகுதியில் உள்ள சாலையில் செல்பவர்கள் மீது கல் துண்டுகள் பறந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் , மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில் , வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விட்டு , தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்தனர்.
