
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பை வைத்திருந்த நபரை தடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னும் பின்னுமாக பதிலளித்த அந்த நபரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது, அவர் பீகார் மாநிலம் மொசஃபார்புரத்தை சேர்ந்த ராஜூ சஹானி (வயது 32) என அடையாளம் காணப்பட்டார். காவல்துறையினரது தீவிர விசாரணையில், ராஜூ சஹானி, விற்பனைக்காக 1 கிலோ 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களுடன் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி திருமதி உமா மகேஸ்வரி, அவரை கோவையில் உள்ள மத்திய சிறையில் காவல்துறையினரின் முன்னிலையில் ஆணையிட்டார்.
மேட்டுக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுவதால், பல வடமாநிலத்தவர்கள் தற்காலிக தொழிலாளர்களாக குடும்பத்துடன் குடியேறி உள்ளனர். இதன் பின்னணியில் இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம், மேட்டுக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
