அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணர்ச்சிகளை கையாளுவது எப்படி என்ற பயிற்சி நடைபெற்றது.

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான “உணர்ச்சிகளை கையாளுவது எப்படி? உணர்ச்சிகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி” என்ற பயிற்சி நடைபெற்றது. சீர்காழி சீனிவாச சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரியில் 1,100 மாணவர்களுக்கும், வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 900 மாணவர்களுக்கும், பாபநாசம் மற்றும் கொருக்கை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 1,000 பேருக்கும் மூன்று நாட்களாக பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியாளர் ஜீவா பாபு அவர்கள் திறம்பட பயிற்சியை நடத்தினார். நிகழ்ச்சிகளை வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் செய்திருந்தனர். வலங்கைமானில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் வரவேற்றார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொண்டனர். பெண்களுடன் பழகுவது எவ்வாறு, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை எதிர்கொண்டு அவற்றிலிருந்து மீண்டு வெற்றி பெறுவது எப்படி, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவது எப்படி?, நிறுவனத்தில், குடும்பத்தில், கல்வி நிறுவனங்களில் எவ்வாறு நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, கையாண்டு வெற்றி பெறுவது என்பது குறித்து பயிற்சியானது மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அளிக்கப்பட்டது. மாணவர்களிடம் உள்ள இ.க்யூவை எவ்வாறு அறிந்து கொள்வது, இ.க்யூவை வைத்து மாணவர்கள் எவ்வாறு தரம் பிரிப்பது, இ.க்யூவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரே வகுப்பில் பயிலும் தாய் மற்றும் மகனிடம் இருந்த இ.க்யூவைக் கண்டறிந்து அவர்கள் பாராட்டப்பட்டனர். இவ்வாறு ஒரு சிறப்பான பயிற்சியினை வழங்கிய தமிழக அரசுக்கும், பயிற்சி அளித்த ஜெயாபாபு அவர்களையும் மாணவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வருடந்தோறும் நடத்தினால் அவர்கள் வாழ்க்கையில் மேம்பட முடியும் என்று மாணவர் சஞ்சய் என்பவர் தெரிவித்தார். இந்த பயிற்சியானது தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தவும், வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளவும் உபயோகமாக இருக்கும் என்று கல்லூரி மாணவி சத்யா குறிப்பிட்டார்.

பயிற்சியாளர் ஜெயாபாபு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கல்லூரியின் இசிஇ துறைத் தலைவர் சுசீலா பாராட்டினார். வருகை தந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முருகன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதயசங்கர், அகஸ்டின் ஞானராஜ், பாலசுப்பிரமணியன், பாலாஜி உள்ளிட்ட குழுவானது சிறப்பாக செய்திருந்தது.