
இதயங்கள் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் இணைந்து, குழந்தைகளைத் தாக்கும் டைப் 1 நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ‘கிட்டத்தான்’ எனும் விழிப்புனர்வு நடைப்பயணத்தை 3ம் முறையாக நடத்தியது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில், டைப் 1 நீரிழிவு நோயுடன் துணிச்சலாகப் போராடும் குழந்தைகளையும் சேர்த்து, 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். ரேஸ் கோர்ஸ், தாமஸ் பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வை, கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், இதயங்கள் தொண்டு நிறுவனங்கள் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன், மற்றும் ரோட்டரி மெட்ரோடைனமிக்ஸ் கிளப் தலைவர் மகேஷ் பிரபு, வொகேஷனல் சேவைகள் பிரிவு தலைவர் சூர்வஜித் கிருஷ்ணன் மற்றும் பலர் கூட்டாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோட்டரி கிளப்பின் சூர்வஜித் எஸ். கிருஷ்ணன், இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதி முழுவதும் இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிதி, டைப் 1 நீரிழிவு நோய் பாதித்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு உதவப் பயன்படுத்தப்படும் என கூறினார்.
ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ், இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, குழந்தைகளுக்குத் தேவையான இன்சுலின் பம்புகள், மருந்துகள் மற்றும் ஊசிகளுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது..
டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோய் என்றும், இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டார். உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் ஏதோ சில புரிந்துகொள்ளமுடியாத காரணங்களால் குழப்பமடைந்து, இன்சுலினைச் சுரக்கும் செல்களைத் தாக்கும்போது, இந்த நோய் ஏற்படுகிறது என கூறினார்.
