
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025ன், மென்பொருள் பதிப்பின், இறுதிப் போட்டி, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பாக தேசிய அளவில், நடைபெறும் இந்த போட்டிகள், கோவை கிருஷ்ணா கல்லூயில், தொடர்ந்து 6வது முறையாக வழங்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்வின் துவக்க விழாவிற்கு, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான எஸ். மலர்விழி தலைமை தாங்கினார். இந்தியப் பம்ப் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரும், டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநருமான கே.வி. கார்த்திக், இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர். கே. பொற்குமரன் வரவேற்புரை வழங்கினார் அப்பொழுது மாணவ மாணவிகள் மத்தியில் கூறியதாவது.. இந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 108 மாணவர்கள் அடங்கிய 20 குழுக்கள் பங்கேற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் சவாலான 4 புதிர் அறிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.வி. கார்த்திக் கூறியதாவது..
ஜல் சக்தி அமைச்சகத்தின் இப்போடிக்கான புதிர் அறிக்கைகள், இந்தியாவின் நீர் பாதுகாப்புப் பணிக்கு மிகவும் அவசியமானவை என்றார்.
“இந்த ஹேக்கத்தானில் நீங்கள் அளிக்கும் தீர்வுகள், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதுடன், மத்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை நோக்கிய முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்,” என்றும் அவர் கூறினார். இந்த ஹேக்கத்தான் ஒரு போட்டி மட்டுமல்ல, இது ஒரு பொறுப்பு, நமது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சி பாதைக்கு இது ஒரு கட்டுமானப் பணி போன்றது. ‘விக்சித் பாரத் 2047’ இலக்கில், ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும் என்று கனவு உள்ளது. இந்த இலக்கை அடைய, நவீன, உறுதியான மற்றும் நிலையான நீர் உள்கட்டமைப்பை நாம் வடிவமைத்து பயன்படுத்த வேண்டும். இது இங்குள்ள ஒவ்வொரு பொறியாளரின் பணியாகும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் போட்டியாளர்களுடன் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி கே. சுந்தரராமன், மற்றும் நடுவர்கள், வழிகாட்டுனர்கள், மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் மாணவ மாணவியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
