கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை ஊராட்சியில் உள்ள அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோவிலில் ஆகம விதிப்படி கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பாமா ருக்மணியுடன் காளிங்க நர்த்தன அவதாரத்திள்ளர்

காலை 5 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது. மேலும் இங்குள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ உலகளந்த பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்டவர்களும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தனர்.

அதனை தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் மற்றும் மாலை ஸ்ரீ கிருஷ்ணர் கருட வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

உறியடி நிகழ்ச்சியில் பால், வெண்ணெய், பூக்கள் போட்டு கட்டப்பட்ட பானையை சிறு குழந்தைகள் கலந்து கொண்டு உடைத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து சுமார் 30 அடி வழுக்கு மரத்தில் விளக்கெண்ணெய், சோற்றுகற்றாலை, ராய் உள்ளிட்டவைகளை வைத்து மரம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேய்க்கப்பட்டு வழுக்கு மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கயிறு கட்டி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து சிறு குழந்தைகள் முதலில் வழக்கு மரம் ஏறினர். பின்னர் இளைஞர்கள் மரம் ஏறினர். அதில் குழு குழுவாக இளைஞர்கள் இணைந்து மரம் ஏற முயன்றனர். அப்போது அவர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டது. அவர்கள் ஏறி, ஏறி வழுக்கு மரத்தில் வழுக்கி விழுந்தது சுற்றி இருந்த அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ஒரு இளைஞர் வழக்கு மரம் முழுவதும் ஏறி பரிசு தொகையை எடுத்தார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு, இறை வழிபாடு மன்றம், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.