
திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு மாசி மயான சூறை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் ஸ்ரீ அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் சிறப்பு பரிகாரங்கள் செய்யப்பட்டன. மேலும், பக்தர்களுக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் மயான கொள்ளையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெள்ளாளகண்டன் திருவுருவ மண் சிலை வடிவமைக்கப்பட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற இடங்களிலிருந்தும் பக்தர்கள் “மயான கொள்ளை” விழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் வருகை புரிந்தனர்.
“நினைத்ததை நிறைவேற்றும் ஓம் ஸ்ரீ ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்கி சென்றால் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்” என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பின்பு விழாவின் இறுதிநாளில் இரவு முழுவதும் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டு, அனைவரும் ஆனந்தத்துடன் திரும்பிச் சென்றனர்.
