பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலி பறிப்பு..

அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை மகாராஜா நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
இவர் தற்போது கும்பகோணம் கூட்டாட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி வைஜயந்திமாலா.

இந்த நிலையில் சசிகுமார் மற்றும் அவரது மனைவி வைஜெயந்தி மாலா ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள ராணுவ கேண்டினில் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பசுபதி கோவில் தாழமங்கை கோவில் அருகே சென்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வைஜெயந்திமாலா கழுத்தில் அணிதிருந்த ஏழு பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
இதில் வைஜெயந்தி மாலாவுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து வைஜெயந்திமாலா அய்யம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் உஷா , உதவி காவல் ஆய்வாளர் மகர ஜோதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கும்பகோணம் தஞ்சை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.