வலங்கைமான் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோதண்டராமசுவாமி திருக்கோயிலில், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி முதல் காலம் பூஜைகள் நடைபெற்றது. 20 – ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று இரண்டாம் காலம் பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று மூன்றாம் காலம் பூஜைகள் நடைபெற்றது. 21-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்காம் காலம் பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 9:00 மணி முதல் 9: 35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு எஜமானர்கள், ஆச்சார்யர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகளை சேங்காலிபுரம் சர்வ ஜாதகம் “வைகாநச ப்ரவீண” ஆர். பாலாஜி பட்டாச்சாரியார், ஆலய பட்டாச்சாரியார் எஸ்.பாஷ்யம் ( எ) சுந்தர்ராஜன் ஐயங்கார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மங்கள வாத்தியம் வலங்கைமான் வி.எம். பாலசுப்பிரமணியன் & குழுவினர். கும்பாபிஷேக விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கு காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணிக்கு கருட சேவை வீதி உலா காட்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ். ராஜராஜேஸ்வரன், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் டி.சீத்தாராமன், அறங்காவலர் எஸ். லட்சுமணசாமி, உபயதாரர்கள், வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்தினர், நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.