கோவையில் வுல்ஃப்ஸ் பிட்னெஸ் ஃபேக்டரி சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு 5 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கோவை அவிநாசி ரோடு கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் மாநில அளவிலான ஐந்தாவது ஆண்டு வுல்ஃப் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 55 முதல் 80 கிலோ எடை பிரிவு மற்றும் மாஸ்டர்கள் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. சுமார் 2500 முதல் 5000 வரையிலான வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற வீரர்களிடம் எந்த நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஸ்பான்ஷர்களும், விருந்தினர்களும் கூட இல்லாமல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அவர்களின் பயிற்சியாளர்களை கொண்டே பரிசுகள் வழங்கப்பட்டது. மாதா, பிதா, குரு மற்றும் மூத்தவர்களை மதிக்க வேண்டிய அவசியத்தை ஜென்சி குழந்தைகளுக்கு கொண்டு செல்லும் விதத்தில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 30 இடங்கள் வரை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகை பரிசாக அளிக்கப்பட்டது. முதலிடம் பிடித்தவர்கள் வுல்ஃப்ஸ் பிட்னெஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் அறிவிக்கப்பட்டார்கள். இதன்மூலம், முதலிடம் பிடித்த வீரர்கள் தங்கள் பாடிபில்டிங் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். அதற்கு, வுல்ஃப்ஸ் பிட்னெஸ் ஃபேக்டரி நிறுவனம் உறுதுணையாக இருக்கும்.


போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டி சக்தி இத் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.
இந்தியாவில் ஒரு பாடி பில்டிங் போட்டியில் இவ்வளவு அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றது இதுதான் முதன்முறை. கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த போட்டியை நடத்தியுள்ளோம். ரொக்கப்பரிசு மட்டும் 5 லட்சம் வரை வழங்கியுள்ளோம். பணம் இல்லையென்றாலும் திறமையுள்ள பாடி பில்டர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதே எங்கள் நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாகும். திறமை இருந்தும், பணம் இல்லை என்கிற காரணத்தினால் வீரர்கள் முடங்கி போய் விடக் கூடாது. சோர்வடைந்து விடக் கூடாது. இதற்காகவே, இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் ” என தெரிவித்தார்.