சீர்காழி அருகே செம்பதனிருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆய்வு .சுரங்க வழிப்பாதை தொடர்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் ஆலோசனை.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே நாங்கூர் செல்லும் சாலைக்கு சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து அவர் கேட்டறிந்தார். இப்பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைத்தால் இருபுறமும் உள்ள கிராம மக்கள் எளிதில் சென்றுவர முடியும் எனவும் இணைப்பு வழியில்லாமல் 4 வழி சாலை அமைக்கப்படுவதால் அத்தியாவசிய பணிகளுக்கு இருபுறமும் உள்ள கிராம மக்கள் சென்றுவர முடியாத சூழல் ஏற்படும் என தெரிவித்தனர். கிராம மக்களின் கோரிக்கை குறித்து நான்கு வழி சாலை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்து சென்றார். இதேபோல் தென்னலைக்குடி- வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் சுரங்கவழிப்பாதை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதா விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோரிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இருபுறமும் உள்ள கிராம மக்கள் விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரும் பிரதான சாலை என்பதாலும் ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு எளிதில் சென்று வரும் இணைப்பு சாலையாகவும் தென்னலைகுடிச்சாலை அமைந்துள்ளது எனவே இப்பகுதியில் சுரங்க வழி பாதை அமைப்பதற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.உடனே இது குறித்து நான்கு வழி சாலை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் தற்போதைய சூழலில் பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளது முடிந்தவரை சுரங்க வழி பாதையின் உயரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்துச் சென்றார். பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.