ராமநாதபுரம்,நவ.26:-
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசலால் உடன்பிறப்புகள் உச்சகட்ட விரக்தியில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பதவி வகித்து வருகிறார்.இதே மாவட்டத்தில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயித்து மாவட்டத்தின் அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பதவி வகித்து வருகிறார்.தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.அமைச்சரின் ஆதரவாளர்களோ நாங்கள் தான் பெரியவர்கள் என்று ஒரு பக்கமும்,மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களோ நாங்கள் தான் பெரியவர்கள் என்று மறுபக்கமும் குடும்பிபிடி சண்டை போட்டு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டி பூசல் கடுமையாக நிலவி வருவதாக கூறப்படுகிறது.மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தி.மு.க-வை சேர்ந்தவர்களை மக்கள் பிரதிநிதிகளாக அமர வைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.அதே போல் தமிழகத்தில் மூத்த அரசியல்வாதி என கருதப்படும் அமைச்சர் ராஜகண்ணப்பனும் ஆளும் தி.மு.க அரசிற்கு பல்வேறு வகைகளில் பக்கபலமாகவும் இருந்து வருகிறார்.மனிதனுக்கு இரண்டு கண்கள் எவ்வாறு முக்கியமோ அதைப்போல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மந்திரி ராஜகண்ணப்பனும்,மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும்.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்,கட்சி நிகழ்ச்சிகள்,தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்ல விஷேஷங்கள் உட்பட அனைத்திலும் எவ்வித பாகுபாடுமின்றி தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்று வருகிறார்.ஆனால் அமைச்சரோ பணிச்சுமை காரணமாக மாதத்தில் 15 நாட்கள் சென்னையிலும்,மீதமுள்ள 15 நாட்கள் தனது சொந்த ஊரான சிவகங்கையிலும் இருந்து விடுகிறார்.மாவட்டத்தின் அமைச்சராக பதவி வகிக்கும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தான் நின்று வெற்றி பெற்ற முதுகுளத்தூர் தொகுதி மக்களையும் நேரடியாக சந்தித்து குறை,நிறைகளை கேட்டறிவதில்லை எனவும்,தனது ஆதரவாளர்கள் மூலமும்,முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக ஊழியர்கள் மூலமுமே அனைத்து தரப்பினரையும் சந்திப்பதாக பரவலாக பேசப்படுகிறது.இந்நிலையில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா எம்.எல்.ஏ-விற்கு கழக உடன் பிறப்புகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கட்சி பணிகள்,அரசு நிகழ்ச்சிகள் என எதுவாயினும் மறுப்பு தெரிவிக்காமல் கலந்து கொண்டு கழக தொண்டர்களிடையேயும்,மாவட்ட நிர்வாகத்திடமும் அனுசரித்து செல்லும் மாவட்ட செயலாளரை கண்டாலே அமைச்சர் தரப்பினருக்கு ஆகுறதில்லையாம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாது தனக்கே உரிய பாணியில் வீறு நடை போட்டு வரும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ-வுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க-வினரின் வாக்கு வங்கியை குறைக்கும் நோக்கில் அவரை பற்றி இல்லாத,பொல்லாத அவதூறுகளும்,வதந்திகளும் சமூக வலைதளங்களிலும்,அறிவாலயத்துக்கும் பறந்த வண்ணம் உள்ளதாம்.தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற போது இருந்த கோஷ்டி பூசல் தற்போது இல்லை என்பதாகவே நினைத்திருக்கின்றனர்.இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் கொடுக்கப்பட்ட அட்வைசுக்கு அடிபணிந்து தி.மு.க வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றி வருவது மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் அவரது தரப்பினர் மட்டும்தானாம்.ஆனால் அமைச்சரும்,அவரது ஆதரவாளர்களும் அறிவாலய அட்வைசை ஒருகாதில் வாங்கிக்கொண்டு,மறு காதில் விட்டு வண்ணமாக மாவட்ட செயலாளரை பதவியை காலி செய்து எப்படியாவது தங்களது கன்ட்ரோலுக்குள் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வை கொண்டு வருவதிலேயே முனைப்பு காட்டி வருகின்றனராம்.அப்பா,மகன் என தலைமுறை,தலைமுறையாக தி.மு.க-விற்கு தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்து தொண்டாற்றி வரும் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மீதான அவதூறுகளையும்,வதந்திகளையும் தூக்கி தூரப்போட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் 4 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிக்க அறிவாலயம் ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ராமநாதபுரம் மாவட்ட கழக உடன்பிறப்புகளிடையே வலுப்பெற்றுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளான தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை ஆகியவற்றில் ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களை சிறப்பான முறையில் வரவேற்று இவ்விரு நிகழ்வுகளிலும் மாவட்ட நிர்வாகத்திடமும்,மாவட்ட காவல்துறையிடமும் அவ்வப்போது கலந்துரையாடி அரசுக்கு எவ்வித அவப்பெயரும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொண்ட பெருமையும் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ-வை மட்டுமே சாரும் என்பதாகவும் பேசப்படுகிறது.எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க 4 தொகுதிகளையும் கடந்த தேர்தலை போல வென்றெடுக்க மாவட்ட செயலாளரை மாண்புமிகு அமைச்சராக தேர்வு செய்ய அறிவாலயம் நோக்கி கழக உடன்பிறப்புகளின் குரல் ஒலிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.உடன்பிறப்புகளின் உரத்த குரல் அறிவாலயத்தில் ஒலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
