இராமநாதபுரத்தில் ரூபாய் 1 கோடிக்கும் மேலாக மக்களின் வரிப்பணம் வீண்-நாம் தமிழர் நிர்வாகி குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜீ அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:-

இராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட செம்மண்குண்டு ஊரணி நடைபயிற்சி மேடையில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் 1 கோடிக்கும் மேல் தண்ணீரில் மிதக்க விட்ட அவல நிலை காணப்படுகிறது‌.நகராட்சி பகுதியில் 32 ஊரணிகள் உள்ளன.அந்த ஊரணிகளை தூர்வாரும் பணிகளையும்,அந்த ஊரணிக்கு வரும் நீர் வழித்தடத்தில் எந்த ஒரு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாததால் பல ஊரணிகள் வறண்டு கிடக்கிறது.லாப நோக்கத்துடன் நகரின் மையப் பகுதியில் உள்ள செம்மண்குண்டு ஊரணி உள்பகுதியில் சிமெண்ட் கல் பதித்து, மற்ற பகுதிகளுக்குச் தண்ணீர் செல்ல விடாமல் ஒரு சிமெண்ட் தொட்டி போல அமைத்து நகராட்சி நிர்வாகம் மக்கள் வரிப்பணத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு வீண் விரயம் செய்துள்ளது‌.இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது அங்கு வாழும் பூச்சிகள்,புழுக்கள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் செல்லாது அருகில் உள்ள வீடுகளுக்கும் நீராதாரம் இருக்காது எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆரம்பத்தில் நாங்கள் கூறினோம் அது எதையும் செவிசாய்க்காமல் இந்த ஊரணியில் நடைபாதை அமைப்பதும், உள்ளே சிமெண்ட் தொட்டி போல் அமைத்து லாப நோக்கத்துடன் ராமநாதபுரம் எம்.எல்.ஏ,நகர் மன்ற தலைவர்,கமிஷனர்,பொறியாளர் ஆகியோர் கூட்டு சேர்ந்து கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றி 1 கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீரில் மிதக்க விட்டு கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.திராவிட மாடல் அரசு மக்களின் வரிப்பணத்தை வீணடித்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.