
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில்
புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடக் கட்டுமானப்
பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம்,
வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில்
செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இக்கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர்
பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த புதியக் கட்டடம் 8 தளங்களைக் கொண்டு கட்டப்பட்டு வருவதுடன் ஒவ்வொரு
தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முடிவுற்ற பணிகள், டைல்ஸ் பதித்தல்,
பூச்சுவேலை உள்ளிட்ட எஞ்சிய பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனங்கள்
நிறுத்துமிடம் அமைத்தல், அலங்கார வளைவு அமைத்தல் உள்ளிட்ட பிற பணிகளும்
பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரம், இனிவரும் நாட்களில்
மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் விவரம், பணிகள் முடிவடையும் காலம் உள்ளிட்ட
பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பணிகளை தொடர்ந்து
தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய்க் கோட்டாட்சியர் முருகன், உதவி பொறியாளர்
இமாம் ஷெரிப், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பசுபதி, உள்ளிட்ட பலர்
உடனிருந்தனர்.
