இளம் வயதினரிடையே குடல் அழற்சி நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பக்கட்ட நோயறிதலே முக்கியம்: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

● குடல் அழற்சி நோய் என்பது செரிமானப் பாதையில் ஏற்படும் நாள்பட்ட பிரச்சனையாகும்; இதில் அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் மற்றும் கிரோன் நோய் ஆகியவை முக்கியமானவை (Ulcerative colitis and Crohn’s disease).
● இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் சுமார் 20 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மதுரை, மே 23, 2026:¬இந்தியாவில், குறிப்பாக இளவயது நபர்கள் மத்தியில் குடல் அழற்சி நோய் (IBD) தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குடல் தொடர்பான பாதிப்பு அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி, சரியான நேரத்திற்குள் சிகிச்சை பெறுவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நோயில் அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் மற்றும் கிரோன் நோய் என்ற இரு முக்கிய பாதிப்பு நிலைகள் உள்ளன (ulcerative colitis and Crohn’s disease). தற்காலிகமான செரிமானப் பிரச்சனைகள், உணவு ஒவ்வாமை அல்லது குடல் எரிச்சல் நோய் (IBS) போல் இல்லாமல், இவை செரிமானப் பாதையில் தொடர்ந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் குடற்புண், இரத்தக் கசிவு, உடல் எடை குறைதல், இரத்த சோகை, குடல் சுருங்குதல் மற்றும் சீழ் கட்டுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலத்தில் இரத்தம், உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வு, காய்ச்சல் மற்றும் அடிக்கடி ஏற்படும் குடல் பிரச்சனைகள் ஆகியவை இந்த நோய் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். சில நோயாளிகளுக்கு மூட்டு வலி, தோல் தடிப்புகள், கண் வீக்கம் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் கூடுதலாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண தொற்றுகள் மூலம், குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் காசநோய் (infections, piles, irritable bowel syndrome, or intestinal tuberculosis) என தவறாக பெரும்பாலான நேர்வுகளில் புரிந்துகொள்ளப்படுவதால், உண்மையான நோய் பாதிப்பைக் கண்டறிவதில் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட தாமதம் ஆவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆண்டுதோறும்அன்று உலக குடல் அழற்சி நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய குடல் மருத்துவ துறையின் முதுநிலை நிபுணர்டாக்டர் P.L. அழகம்மை கூறுகையில், “இந்தியாவில் இந்த நோய் இப்போது அரிதான ஒன்றல்ல. உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 1990-ல் சுமார் 1.3 லட்சமாக இருந்த IBD நோயாளிகளின் எண்ணிக்கை, 2019-ல் 2.7 லட்சமாக இரட்டிப்பாகியுள்ளது. இருப்பினும், மருத்துவமனை தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்நோயின் தாக்கம் குறிப்பாக நகர்ப்புற மக்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருவதைக் காண முடிகிறது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அதிவேகமான நகரமயமாக்கல், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிக பயன்பாடு, மாசு, மன அழுத்தம், உடற்பயிற்சியற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் மேம்பட்டிருக்கும் நோயறிதல் வழிமுறைகள் ஆகியவை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதற்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து குறைவான உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மாற்றி, குடல் வீக்கத்திற்கு வழிவகுக்கின்றன,” என்றார்.

குடல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணரும் மற்றும் துறைத் தலைவருமான டாக்டர் மோகன் கூறுகையில், “எமது மருத்துவமனையில் தற்போது சுமார் 125 IBD நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே இந்த நோய் புதிதாக கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரத்த சோகை, உடல் எடை குறைதல், அதிக ஸ்டெராய்டு மருந்து தேவைப்படும் நிலை ,குடல் சுருக்கங்கள் மற்றும் ஃபிஸ்டுலாக்கள்(intestinal strictures and fistulae) போன்றதீவிர குடல் பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளையும் நாங்கள் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம்,” என்றார்.இந்த நோய் வராமல் தடுக்க எந்த வழியும் இல்லை என்றாலும், மக்கள் சீரான, நார்ச்சத்து நிறைந்த, வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலமும் இந்நோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், தேவையில்லாமல் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பதைத் தவிர்ப்பது, தொடர்ந்து தவறாமல் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூக்கம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் குடல்அழற்சி நோய் தீவிரமடைவதைத் தடுக்க இயலும்.

இந்நோயின் அறிகுறிகள் குறைந்தவுடன் நோயாளிகள் தாங்களாகவே மருந்துகளை நிறுத்தி விடுவது ஆபத்தானது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நோய் பல மாதங்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து, பிறகு திடீரென தீவிரமடையும் தன்மை கொண்டது. நாள்பட்ட பாதிப்பால் கடுமையான இரத்தப்போக்கு, குடல் அடைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளில் வளர்ச்சி பாதிப்பு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இரத்தப் பரிசோதனைகள், மலப் பரிசோதனைகள், கொலனோஸ்கோபி, ஸ்கேன் மற்றும் பயாப்ஸி (திசு ஆய்வு) ஆகிய பல்வேறு பரிசோதனைகளின் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது. தற்போதுள்ள மேம்பட்ட கொலனோஸ்கோபி மற்றும் மருத்துவ பரிசோதனை வசதிகளால், பல நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது சாத்தியமாகியிருக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில் IBD சிகிச்சை முறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர். ஸ்டெராய்டுகள் போன்ற வழக்கமான மருந்துகளுடன், மேம்பட்ட உயிரியல் மருந்துகள் மற்றும் நவீன இலக்கு சிகிச்சைகள் மூலம் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குடல் புண்களை குணப்படுத்தவும் முடியுமென்பதால், நோயாளிகளின் நீண்டகால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது சாத்தியமே.

பெருங்குடல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க மருத்துவர்கள், உணவுமுறை நிபுணர்கள் மற்றும் தேவைப்படும்போது உளவியலாளர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழு மூலம் குடல்அழற்சி நோய்க்கு மேம்பட்ட ஸ்கேன், நவீன கொலனோஸ்கோபி, மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால புற்றுநோய் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் சிறப்பான சிகிச்சை இம்மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மருத்துவமனையைச் சேர்ந்த திரு. திலீப் பெர்னார்ட் அவர்களும் உடனிருந்தார்.