
கோவை சரவணம்பட்டி மீனாட்சி நகர் லே-அவுட்டில் பொது மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் பூங்கா அமைக்க ‘ஓ.எஸ்.ஆர்’ நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.10 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிவஞானம் என்பவரின் மகன் எஸ். அரவிந்த் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்துள்ளார். மேலும், அந்த பூங்கா நிலத்திற்குப் பதிலாக தனக்குச் சொந்தமான மாற்று நிலத்தை மாநகராட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிவஞானத்தின் மகன் அரவிந்தின் இந்த கோரிக்கையை கடந்த 8.12.2020 அன்று கோவை மாநகராட்சி நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடந்த 17.7.2021 அன்று மாநகராட்சி சார்பில் அரவிந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து அரவிந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19.12.2025 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த நிலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பூங்காவாக மேம்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கோவை மாநகராட்சி அதிகாரிகள் பெரும் போராட்டத்திற்கு இடையே அந்த பூங்கா நிலத்தை மீட்டெடுத்து, சுற்றிலும் வேலி அமைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் பூர்ணிமா கிருஷ்ணா மூலம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் மாநகராட்சி ஆணையர் கூறியிருப்பதாவது:
“அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்டில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் பொதுமக்களின் நலனுக்கானவை. அதை வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
மனுதாரர் தனது நிலத்திற்குச் செல்ல பூங்கா நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதி கேட்கிறார். ஆனால், நில வரைபடத்தின்படி அவரது நிலத்திற்குச் செல்ல முறையான தனிப்பாதை மற்றும் வழிகள் உள்ளது. தற்சமயம் அவரது குடும்பத்தாரின் நிலத்தின் வழியாகச் சென்று வருகிறார். எனவே, சுயநலத்திற்காக பொது நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு எந்த சலுகையும் காட்ட முடியாது. இந்த மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதால், செலவுத் தொகையுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று வந்தது. வழக்கு விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.தியாகராஜன் கூறும்போது இதுபோல அரசு பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வோரை கடுமையாக தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.
