
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரத்திற்கு உதவும் வகையிலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை பாதுகாப்பாகவும் முறையாகவும் அகற்றும் நோக்கத்திலும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக சூரிய சக்தியில் இயங்குவதால் மின்சாரம் தேவையில்லை. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “நாப்கில் ஸ்மார்ட்பின்” இயந்திரத்தை பள்ளி பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
பின்னர் அவர் அனைவரது மத்தியிலும் கூறியதாவது.. பெண்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கு உதவும் வகையில் மாணவிகள் உருவாக்கிய இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான தொழில்நுட்பங்களை மாணவிகள் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சூரிய சக்தியில் முழுமையாக இயங்கும் இந்த ஸ்மார்ட்பின், மின்சாரமின்றி செயல்படுவதோடு, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுகாதாரமான முறையில் எரித்து அகற்றி, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் டி. மகேஷ்குமார் மற்றும் கோவை மாநகராட்சியின் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளின் புதுமை முயற்சியைப் பாராட்டினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின் படி, நாம் வாழும் சமுதாயத்திற்குப் பயனுள்ள செயல்களைச் செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான ஊக்கமும், இத்தகைய கண்டுபிடிப்புகளை முன்னெடுக்க உந்துசக்தியாக அமைந்துள்ளதாக மாணவிகள் குறிப்பிட்டனர்.
