
தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் கோவை மண்டல ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள மாநில, வட்ட நிர்வாகிகள், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் மாநில பொருளாளர் பழனி, மாநில தலைவர் பாஸ்டின் ராஜ், மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகள் ஒற்றுமை குறித்தும் சிறப்புரையாற்றினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் கூறியதாவது..
இங்கு நடைபெற்ற இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் வேலைப்பளு ஒப்பந்தம் விரைந்து ஏற்படுத்திட வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல் செய்திட வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்திட வேண்டும், இட மாறுதல் உத்தரவு பெற்றுள்ள கேங் மேன் பணியாளர்களை உடனடியாக பணி விடுப்பு செய்திட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், ஐடிஐ படித்தவர்களை கள உதவியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும், பணிக்கொடை தொகையை 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்திட வேண்டும், திருமண கடன் ரூபாய் 5 லட்சமாக உயர்த்திட வேண்டும், துப்புரவு பணியாளர்கள் இல்லாத அலுவலகங்களுக்கு பகுதிநேர பணியாளர்களை உடனடியாக நியமித்திட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அரசுக்கு முன் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
