
கோவை மாவட்டம், மதுக்கரை காவல்நிலையத்தில், டாக்டர் கலாம் பவுண்டேஷன் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாம் பவுண்டேஷன் உறுப்பினர் ஆகாஷ், கூறியதாவது..
எங்களுடைய கலாம் பவுண்டேஷன் சார்பாக கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் ஆறு விதமான புதிய நூலகங்கள் வைத்துள்ளோம். ஆட்டோக்கள் மற்றும் கோவை விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் வைத்துள்ளோம். மேலும் அப்துல் கலாமின் அறிவு சார்ந்த திட்டத்தில் குழந்தைகள் புத்தகங்களைப் படித்து அறிவாற்றல் மிகுந்த குழந்தைகளாக வளர வேண்டும், என்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் முன்னெடுப்பாக காவல் நிலையத்துக்கு வரும் பொது மக்களின் நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கோவை மாவட்டத்திலே முதல்முறையாக மதுக்கரை காவல் நிலையத்தில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. எங்களின் இந்த முயற்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உறுதுணையாக இருந்தார். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 34 காவல் நிலையத்திலும் இதுபோன்ற நூலகம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல ஆறு மாத காலத்திற்குள் அரசுப்பள்ளிகளில் “வெயிட்டிங் ரூம்” என்ற பெயரில் நூலகம் அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளோம். அந்த நூலகத்தில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, யூபிஎஸ்இ போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள், காவல் கண்காணிப்பாளருக்கு பூங்குத்துக் கொடுத்து வரவேற்று, அவர்களுடன் கலந்துரையிடினார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தில் நாள்தோறும் நடக்கும் நடவடிக்கைகளை மதுக்கரை காவல் ஆய்வாளர் செயல்முறை விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதன் அவசியத்தினை விளக்கினர். தொடர்ந்து பேசிய மாணவர்கள், காவல் நிலையம் வந்த அனுபவம் எங்களுக்கு மிகவும் புதியதாக இருந்தது, காவல் நிலையத்தில் எப்படி புகார் அளிக்க வேண்டும். காவல் நிலையம் எப்படி செயல்படுகிறது, காவல்நிலைத்தில் காவலர்கள் எந்தெந்த பணியை செய்கின்றனர். ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், என்பது குறித்த விளக்கங்களை அளித்தது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலாம் பவுண்டேஷன் உறுப்பினர்கள், உதவி ஆணையர் சுரேஷ், மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
