பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி ரூ.1.2 கோடி மூலம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன், அதன் தலைவர் வனிதா மோகன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி; கோவை கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் முன்பு அமைச்சர் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். அந்த வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது, பிரிக்கால் தலைவர் வனிதா மோகன் பேசுகையில் இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகளை எடுத்துரைத்தார்.
சுமார் 5050 சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 5 தனி வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான பிரத்யேக அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு பகுதி, முழுமையான CCTV கண்காணிப்பு வசதி, ஒவ்வொரு வகுப்பறையிலும் குழந்தைகளின் வயதுக்கேற்ப மேசை, நாற்காலிகள் மற்றும் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முக்கியமாக பள்ளி வளாகத்தில் 22,000 லிட்டர் மழைநீரை சேமிக்கும் திறன் கொண்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பிரிக்கால் நிறுவனத்தின் இந்த பெரும் பங்களிப்பை பாராட்டினார். இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பள்ளி வளாகத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வதோடு, அவர்கள் பெறும் கல்வியின் மூலம் தமிழகத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கட்டிட வளாகத்தை கட்ட பிரிக்கால் நிறுவனம் ரூ. 1.2 கோடியை செலவு செய்யவில்லை, பள்ளி கல்வியின் மீது அதை முதலீடாக வழங்கியுள்ளது. அந்த முதலீட்டுக்கு வட்டியாக கல்வி மூலம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்தி தருவது எங்கள் கடமை, நாங்கள் அதை நிச்சயமாக வழங்குவோம் என்று அமைச்சர் கூறினார்.
தமிழக முதலமைச்சரின் ‘காலை உணவுத் திட்டம்’ முதல் ‘நன் முதல்வன் திட்டம்’ வரையிலான பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலத்தில் உள்ள குழந்தைகளின் (பள்ளி முதல் கல்லூரிக் கல்வி வரை) கல்வித் தேவைகளை தமிழ்நாடு அரசு கவனித்துக் கொள்ளும் என்றும், தமிழக அரசு உலக அளவிலான நிறுவனங்களுடன் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கிடைக்க வழிசெய்யும் என்று கூறினார். பெற்றோர் அவர்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துவிட்டால் போதுமானது, அவர்களின் குழந்தைப் பருவம் தொடங்கி பணிக்கு செல்லும் காலம் வரை சுமார் 25 ஆண்டுகள் அரசு வழிகாட்டும் என கூறினார்.
மாணவர்கள் நன்றாக படிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு, பிரிக்கால் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

