கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளாக பிரபல நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் மனோகரன் (58). பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மூத்த செய்தியாளர் மனோகரன் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் இருந்த மனோகரன் மற்றும் அவரது மனைவி இருவரையும் அப்பகுதி மக்கள் கயிறு மூலம் மீட்டனர்.

இந்நிலையில் வீடிழந்து தவித்து வரும் மூத்த நிருபரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர் சந்தித்து ஆறுதல் கூறி வரும் நிலையில், நேற்று திமுக மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு மூத்த நிருபர் மனோகரனை சந்தித்து நிதியுதவி அளித்தார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை வழங்குவதாக உறுதியளித்தார். இவர்களுடன் தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் தணிகைவேலன், ஜனார்தனன், சக்திவேல்,டிரைவர் குமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
