தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் நரிக்குறவர்கள் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சை ஜோதி அறக்கட்டளை தொண்டு நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர் .

அதிகாலையிலேயே தங்களது வீடுகளின் முன்பு கோலமிட்டு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வாசகங்களை எழுதியிருந்தனர் . பின்னர் பாரம்பரிய உடையில் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் தீ மூட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட்டனர் . அப்போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று உரக்க கூறி குலவை சப்தமிட்டு ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர் . மேலும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை நரிக்குறவர்கள் சார்பில் தெரிவித்தனர் . பின்னர் நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான நரிக்குறவ இன ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சினிமா பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடி உற்சாகமாக வைப் செய்தனர் . முத்தாய்ப்பாக மாற்றுதிறன் மாணவி பவித்ரா தனது கால்கள் செயலிழந்த நிலையிலும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து கொண்டு பாடல்களுக்கு ஏற்ப மற்றவர்களுடன் போட்டி போட்டு நடனமாடியது அனைவரின் பாராட்டையும் பெற்றது .
