
கள்ளக்குறிச்சி
அக்-17
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு
வாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட
ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்
தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டு
பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தீபாவளி பண்டிகை ஒரு ஒளித்திருதாளாகும். ஒளித்திருநாளான தீபாவளிப்
பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும் அலட்சியத்தினாலும் விபத்துக்கள் ஏற்படாமல்
இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசுகளைத் தவிர்த்து “மாசில்லா தீபாவளிப் பண்டிகையை”
அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாட பின்வரும் ஆலோசனைகளை குழந்தைகள்
மற்றும் பொதுமக்கள் நலனுக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்குகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கால
அளவான காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் மற்றும் இரவு 7.00 மணி முதல் 8.00
மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் குறைந்த
ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை
மட்டுமே வெடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனிதத்தலங்கள் முதலானவை
அமைந்துள்ள அமைதி பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதிக ஒலி எழுப்பும்
பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும்
வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல்
ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு
வெடிக்க அனுமதிக்காதீர், பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மேலும் குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில்
பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக
பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ஒலியினைக் குறைப்போம், செவியினைக் காப்போம். எனவே
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை “மாசில்லா தீபாவளிப்
பண்டிகையாகக்” கொண்டாட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்
என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவிப் பொறியாளர்
ப.ராம்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
