மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி-எஸ்.பியிடம்பா.ஜ.க மாவட்ட தலைவர் பரபரப்பு புகார்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பாரதிய ஜனதா கட்சியில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறேன். நான் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் எனது வாட்ஸ் அப் தளத்தில் பார்வையிட்டபோது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது சகாக்களுடன் மாமிச உணவுகளை உட்கொண்டிருக்கிறார்.மேலும் காவல்துறையினரை அழைத்து மாமிச உணவுகளை மேலே கொண்டு செல்பவர்களை தடுக்கக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார்.அதன் மூலம் அந்த மலையின் மாண்பு மற்றும் மலையின் புனித தன்மையை கெடுத்துள்ளார்.இந்து மதத்தின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.காலம் காலமாக சமய நல்லிணக்கத்திற்கு பேர் போன மதுரையில் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக கருதக்கூடிய இந்த மலை ஒரு குடைவரைக்கோயில். முருகப் பெருமானின் திருமேனி அந்த மலையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்கள் இந்த திருப்பரங்குன்ற மலையை முருகன் குன்றம் என்றே அழைக்கிறது. முருகனாற்றுப்படை, மதுரை காஞ்சி,பரிபாடல், கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் இந்த மலையை பற்றியும்,முருகப்பெருமானை பற்றியும் விரிவாக பேசுகிறது.அது மட்டுமல்ல ஞானசம்பந்த பெருமானின் பல தேவாரப் பாடல்கள் இந்த மலையின் மாண்பை பற்றி பேசுகிறது. அப்படிப்பட்ட புராதானமான இந்து சமூகத்தின் இந்திய கலாச்சாரத்தின் நாகரிகத்தின் அடையாளமாக கருதக்கூடிய இந்த மலையின் மீது ஏறி மாமிச உணவுகளை உண்பதன் மூலம் அந்த மலையின் மகத்துவத்தை வேண்டுமென்றே குறைத்து இருக்கிறார்.ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறார். அந்தப் பகுதியில் இதுவரை நிலவி வந்த மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இதற்கு காவல்துறை அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மத மோதல் ஏற்படாமல் இருக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.