ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த அனைத்து தேவேந்திரகுல வட்டார சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.முதுகுளத்தூர் வட்டார சங்க தலைவர் சேகர்,நிர்வாகிகள் ஜெயகாந்தி,ராம்கி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன்,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சண்முக சுதாகர்,ராஜசிங்கமங்கலம் திரவியம்,கமுதி ராஜ்குமார்,பரமக்குடி லெசிந்தர்,புண்ணியமூர்த்தி,கடலாடி கோவிந்தராஜ்,மூர்த்தி,மருதக்குமார்,பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் தவ.அஜீத்,பாண்டியன் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரையும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களையும் அவதூறாக பேசி பொது அமைதியை சீர்குலைத்து சாதிய கலவரத்தை தூண்டும் முதுகுளத்தூர் மறவர் சங்க செயலாளர் குணசேகரன் மற்றும் வீரப்பெருமாள்,இசக்கி ராஜா,சௌத்ரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கு சொந்தமான இடத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் சிலை நிறுவிடக்கோரியும்,தென் தமிழகத்தில் நடந்த தேவேந்திரர் படுகொலை வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிடக் கோரியும்,முதுகுளத்தூர் மறவர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் சேகனாரை அவதூறாக பேசிய நிர்வாகிகள் மற்றும் அதில் கலந்து கொண்டவர்களை கைது செய்யாத காவல்துறையினரை கண்டித்தும்,தேவேந்திரகுல வேளாளர்களை அட்டவணைப் பிரிவிலிருந்து விடுவித்து பொதுப் பிரிவில் 10 சதவீத இடப்பங்கீடு வழங்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தியும் ஒருமித்த குரலோடு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
