வரத்து குறைவால் விலை அதிகரித்து வரும் தக்காளி


கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை விற்பனை செய்ய நிறைய தக்காளி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கிருந்து தமிழக நகர்களுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு தக்காளியை லாரிகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்பகுதி காய்கறிகள்,தக்காளி போன்றவை தரமானதாக இருப்பதால் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கடந்த மாதம் 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.200 முதல் 500 வரை மட்டுமே விலைப்போனது. ஆனால் இந்த மாதம் பெய்த மழையினால், தக்காளி தோட்டங்கள் அழிந்து வருவதால் விற்பனைக்கு வரும் தக்காளி குறைந்து வருவதால், விலை அதிகரித்து கிரேடு தக்காளி ரூ.900 வரை விற்பனையாகிறது. அதன்படி மொத்த கொள்முதலாக ஒரு கிலோ தக்காளி ரூ.25 க்கு வாங்குவதால் அதை வெளியூர்களுக்கு எடுத்து செல்லும் வாகன வாடகை போன்ற செலவினங்களால் அதிக விலைக்கு விற்க வேண்டி வரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.